உங்களோடு பணியாற்றுபவர்களில் நீங்கள் புகழும்படியாகப் பணியாற்றுபவர் ஒருவர் இருக்கிறாரா? அவர் நிறைவான, அமைதியான, எல்லாம் நிறைந்த வாழ்க்கை அமையப் பெற்றவர ் எனத் தோன்றுமளவிற்குத் திறமையானவரா? மற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப்படாதவரா? தனது தேவைகள் குறித்த தெளிவு உடையவரா? அவரைப் போல நீங்களும் மாற வேண்டுமா? இதோ உங்களுக்காக இங்கே சில குறிப்புகள்!
கவனியுங்கள்
சிறப்பாக உற்றுநோக்கக் கூடியவர்கள் வெகுசிலரே. பேசுவதைவிட அதிகமாகக் கவனியுங்கள். கவனிப்பதன் மூலம் நீங்கள் பிரபலமாக மாறுவீர்கள். அதோடு மற்றவர்களையும் நன்கு புரிந்துகொள்ள முடியும். உற்றுநோக்கும் போது வதந்திகள், ஊழல்கள், உள் அரசியல் போன்றவற்றைப் பற்றியும் நீங்கள் கேட்க நேரிடும். உங்கள் வளர்ச்சிக்கு இது போன்ற தகவல்கள் பெரும் உதவியாயிருக்கும்.
ரகசியத்தைக் காப்பாற்றுங்கள்
உங்களுடன் பணியாற்றுபவர் ஏதேனும் ரகசியத்தைக் கூறினால் அதை ரகசியமாகவே காப்பாற்றுங்கள். அவரின் நம்பிக்கைக்கு உரியவராக இருங்கள். ரகசியத்தைப் பலருக்கும் அறியக் கடைபரப்பி நம்பிக்கையைக் குலைத்துவிடாதீர்கள்.
வதந்திகளைப் பரப்பாதீர்கள்
நமக்குப் பிடிக்காத ஒருவரைப் பற்றி வதந்திகளைப் பரப்புவது கேளிக்கையான விஷயமாக நினைக்கலாம். ஆனால், அப்படி நீங்கள் செய்தால் யாரும் உங்களை நம்பிக்கையானவராகக் கருதமாட்டார்கள். வதந்திகள் கொஞ்ச நாட்களுக்குப் பிரபலமானவையாக இருக்கும். ஆனாலும், அமைதியான, நிலையான மனநிலை உடைய நம்பிக்கையானவரே அலுவலகத்தில் மதிப்பு மிகுந்தவராக இருப்பார்.
பெருந்தன்மையானவராக இருங்கள்
உங்களுக்குப் பதவி உயர்வோ விருதோ கிடைக்காவிட்டால் என்ன? பொறுமிக் கொண்டிருக்காதீர்கள். அமைதியான இடத்திற்குச் சென்று நீங்கள் விரும்பியது உங்களுக்குக் கிடைக்காததற்குக் காரணமென்ன என்று யோசியுங்கள். உங்கள் திறமையை உயர்த்தி, பதவி உயர்வு பெற ஏதேனும் வழி இருப்பின் அதைச் செயல்படுத்துங்கள் அல்லது அங்கிருந்து கிளம்ப வேண்டிய தருணமா என யோசியுங்கள். உங்கள் ஆற்றலைக் கோபத்தில் விரையமாக்காதீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு உதவும் விதத்தில் அதைக் கையாளுங்கள். சரியில்லாத அலுவலகச் சூழல் பற்றிப் புலம்புபவர்களை யாரும் விரும்புவதில்லை.
தொடர்பு கொள்ளுதல்
உடன் பணியாற்றுபவர்களுடன் உரையாற்றுங்கள். மின்னஞ்சலுக்கான இந்தக்காலத்தில் ஒருவரை நேரடிடையாகச் சந்தித்து உரையாடுவது மிகுந்த பயனளிக்கும். விருப்பத்தோடு ஒருவரைத் தேடிச் சென்று உரையாடும்போது அவரைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள முடியும். நாள் முழுவதும் கணினி முன் நேரத்தை வீணாக்குவதை விட ஒருவரை நேரில் சென்று பார்ப்பது ஒருவகையான உடற்பயிற்சியாகவும் இருக்கும்.
நேரம் குறித்த அக்கறை
நேரத்தைச் சரியாக நிர்வகியுங்கள். சரியான நேரத்தில் வேலைகளை முடியுங்கள். உங்கள் வேலையின் சிரமமான பகுதிகளை நீங்கள் விடுமுறையில் சென்றிருக்கும் சமயம் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என எண்ணாதீர்கள். மற்றவர்களின் வெறுப்பையே அது சம்பாதித்துத் தரும்.
பாராட்டு
உடன் பணியாற்றுபவர் ஏதேனும் ஒன்றைச் சாதிக்கும்போது அவரை மனமுவந்து பாராட்டுங்கள். பொறாமைக்கு எப்பொழுதுமே இடங்கொடுக்காதீர். நீங்கள் மற்றவரின் சாதனையைப் பாராட்டும் போது உங்களை நீங்களே மதிக்கக் கற்பீர்கள். உங்கள் வேலையைத் திறம்படச் செய்யவும் உதவும்.
வெளியிலிருந்து ஆதரவு
உங்கள் வேலையைத் தாண்டி வெளியே உள்ள ஆதரவாளவர்களைக் கண்டு கொள்ளுங்கள். உங்களது ஆற்றாமைகளை உங்களது அலுவலகத்தோடு எந்தத் தொடர்பும் அற்ற நண்பரோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
அலுவலகத்தில் உங்களது நடத்தை சரியாக இருந்தால் அதற்கான அங்கீகாரம் வெகு விரைவில் உங்களுக்குக் கிடைக்கும்.
|