Vaasippu

பெண் படைப்புகளின் தொகுப்ப


காலச்சுவடு இதழைத் தொடங்கி இருபது ஆண்டுகள் ஆனதை ஒட்டியும் இருநூற்றைம்பது நூல்கள் வெளிவந்ததை ஒட்டியும் கொண்டாடப்பட்ட 'காலச்சுவடு 20 ஆண்டுகள், 100 இதழ்கள், 250 நூல்கள்' விழாவில் காலச்சுவடு எட்டு நூல்களை வெளியிட்டது. அதில் ஒன்று காலச்சுவடு பெண்படைப்புகள்.

நவீனத் தமிழின் முன்னோடிப் பெண் படைப்பாளியான அம்பை முதல் இளம் படைப்பாளியான கவிதா வரையிலான தமிழகம் மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா நாடுகளையும் உள்ளடக்கிய படைப்பாளிகளின் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், நாவல் பகுதிகள், மதிப்புரைகள், பத்தி, நீரோட்டம் ஆகியவை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இந்த நூலுக்கு கவிஞர் ராஜமார்த்தாண்டன் எழுதிய முன்னுரை இந்த வாசிப்புப் பகுதிக்காக.

தொண்ணூறுகளிலும் அதற்குப் பின்னரும்தான் தமிழில் பெண் படைப்பாளிகள் உத்வேகத்துடன் செயல்படத் தொடங்கினர். சகலவிதமான ஆதிக்கங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரான சுதந்திர வேட்கை கலகக்குரலாக வெளிப்படத் தொடங்கியது. பெண்கள் பற்றிய ஆண்களின் மதிப்பீடுகளும் பார்வை களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.

இதனால் அதிர்ச்சியடைந்த சில ஆண் எழுத்தாளர்கள், பாரம்பரியம் - பண்பாடு என்னும் போர்வையில் பெண் எழுத்துகளைக் கொச்சைப்படுத்தினர். பெண் படைப்பாளிகள் சுதந்திர மாகச் செயல்படுவதற்கான களம் அமைத்துக்கொடுத்த காலச்சுவடு இதழும் கண்டனத்துக்குள்ளானது.

காலச்சுவடில் வெளிவந்த சல்மா, மாலதி மைத்ரி, சுகிர்தராணியின் கவிதைகளே பெருமளவில் சர்ச்சைக் குள்ளாயின. எனினும் காலச்சுவடு அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், பெண்களின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தொடர்ந்து வெளியிட்டு வந்தது - வருகிறது. இந்தத் தொகுப்பைப் படிக்கும் வாசகர்கள் இதனைத் தெளிவாகவே அறிந்துகொள்ள முடியும்.

காலச்சுவடின் 47வது இதழ் பெண்கள் சிறப்பிதழாக வெளிவந்தது. அவ்விதழ்த் தலையங்கத்தின் ஒரு பகுதி வருமாறு:

"சுவர்களாகச் சூழ்ந்திருக்கும் ஆண்களின் உலகைத் தமது படைப்பு ஆளுமையின் மூலம் தகர்க்கிறார்கள் பெண்கள். அவர்கள் தம் படைப்புகளினூடே உருவாக்கும் பொறிகளில் சிக்கித் திணறுகிறது ஆண்களின் இறுமாப்பு.

பெண்கள் வெகுகாலமாக எழுதிவந்த போதிலும்  பெண் என்ற பிரக்ஞையோடு எழுதத் தொடங்கியது சமீபத்தில்தான். வேறுவிதமான பார்வைகளை, வெளிப்பாடுகளை முன்வைக்கும் அவர்களது படைப்புகள் வேறுவிதமான அணுகுமுறையைக் கோருகின்றன. அதன் முக்கியத்துவம் புரியாத ஆண்கள், தம்மை வழிகாட்டிகளாகப் பாவித்துக்கொண்டு அந்தப் படைப்புகளைப் படிப்பதைக்கூட ஒரு சலுகையாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

 உண்மையில், தமது பேதைமையை உணராத பலவீனமே அது. இந்தப் பின்னணியில் பெண்கள் சிறப்பிதழாக இந்த இதழை உங்கள்முன் வைக்கிறோம். இது, பெண்களுக்குக் காட்டப்படும் கருணை அல்ல. அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு ஒரு சிறிய பிராயச்சித்தம் என்று வேண்டுமானால் கூறலாம்."

அச்சிறப்பிதழில் 15 பெண் கவிஞர்களின் கவிதைகள், அம்பை, அமரந்தா, வாஸந்தி, சல்மா ஆகியோரின் கட்டுரைகள், உமாமகேஸ்வரி நாவலின் ஒரு பகுதி, பாமா நேர்காணல், கனிமொழியின் 'நீரோட்டம்', காஞ்சனா நடராஜன், சபீதா கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகள் மற்றும் பெண் படைப்புகள் - படைப்பாளிகள் குறித்த கட்டுரைகளும் நூல் மதிப்புரைகளும் இடம்பெற்றிருந்தன. மேலும், பெண் கவிஞர்களுக்கான போட்டியையும் நடத்தியது காலச்சுவடு அறக்கட்டளை.

காலச்சுவடு 9 முதல் 60ஆவது இதழ்வரை வெளிவந்த பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், நாவல் பகுதிகள், மதிப்புரைகள், பத்தி, நீரோட்டம் பகுதிகளில் பிரசுரமானவை, விவாதங்கள், குறிப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

சுந்தர ராமசாமியின் காலச்சுவடு எட்டு இதழ்களின் முழுமையான தொகுப்பு வெளிவந்துள்ளதால் அவற்றில் இடம்பெற்றுள்ள பெண் படைப்புகள் இத்தொகுப்பில் தவிர்க்கப்பட்டுள்ளன. அதுபோல் இடவசதி காரணமாக அம்பை,  மாலதி மைத்ரி, சுகிர்தராணி, சல்மா ஆகியோரின் சில படைப்புகள் இத்தொகுப்பில் இடம்பெறவில்லை.

மேலும், பெண் படைப்பாளிகள் யாரேனும் விடுபட்டிருந்தாலும், ஆண் படைப்பாளிகளின் எந்தவொரு படைப்பும் இத்தொகுப்பில் இடம்பெற்றுவிடக் கூடாது என்னும் கவனத்துடன் தொகுக்கப்பட்டதால், எழுதியது ஆணா - பெண்ணா என்று தெளிவாகக் கண்டறிய முடியாத படைப்புகள் -தமிழில் சில படைப்பாளிகளின் புனைபெயர்கள் பெண்பால் சார்ந்திருப்பதால் - தவிர்க்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புகள் இத்தொகுப்பில் சேர்க்கப்படவில்லை. விடுபட்டுள்ள பெண் படைப்புகள் பற்றிய தகவல்கள் கிடைத்தால், மறுபதிப்புகளில் அவை சேர்த்துக்கொள்ளப்படும்.

ஆண் படைப்புகள் குறித்த பெண் படைப்பாளிகளின் விமர்சனங்கள், நூல் மதிப்புரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அதேசமயம் பெண் படைப்புகள் பற்றிய ஆண்களின் மதிப்பீடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் வசிக்கும் பெண் படைப்பாளிகளின் படைப்புகளையும் காலச்சுவடு அதிக அளவில் பிரசுரித்துள்ளது. அவ்வகையில் உலகளாவிய தமிழ்ப் பெண் படைப்பாளிகளின் ஆக்கங்களை ஒருசேரப் படித்து நவீனத் தமிழிலக்கியத்தில் அவர்களின் பங்களிப்பினையும், வாழ்க்கை குறித்த அவர்களின் பல்வேறுபட்ட பார்வைகளையும் அறிந்துகொள்ள இத்தொகுப்பு மிகவும் பயனுடையதாக இருக்கும்.

நூல் பெயர்: காலச்சுவடு பெண் படைப்புகள் (1994-2004)
தொகுப்பாசிரியர் : ராஜமார்த்தாண்டன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
முதல் பதிப்பு: 2008
விலை : ரூ. 425

 

 

Could not connect to MySQL