Vaasippu


Vasippu


டாக்டர் ஷாலினியின் அர்த்தமுள்ள அந்தரங்கம் கலகலப்பான நடையில் பாலியல் உலகை விளக்குகிறது

- இளமதி

தோழியில் தொடர்ந்து டாக்டர் ஷாலினி எழுதிக்கொண்டிருக்கும் 'மனவெளி' பகுதியை வாசிக்கும்போது பல நேரங்களில் ஆச்சரியப்படத் தோன்றியிருக்கிறது. அவரது மொழிநடை சற்றே வித்தியாசமானது. மானுடவியலில் சிறிது உளவியலையும் இணைத்து அலசும் தன் கட்டுரைகளை சுவாரஸ்யமாகத் தரும் இவரது புத்தகம் என்பதால் கூடுதல் ஆர்வம் இதை வாசிக்க.

சிறு பூச்சியிலிருந்து மனிதன் வரை இனப்பெருக்கம் என்ற செயல் நடைபெறுவதன் நோக்கமும் அதற்கான அவசியமும் உளவியலோடு அறிவியல் ரீதியாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. காமமா? அதெல்லாம் வெளியே சொல்ற சேதியா என்று உள்ளுக்குள்ளே புதைத்து சந்தர்ப்பம் நேரும்போது வடிகாலைத் தேடிக்கொள்கிற மனோபாவம் எப்படி வருகிறது? எத்தனையோ பெண்களையும் ஆண்களையும் சந்திக்கும்போது, ஒருவர்மீது மட்டும் காதலும் காமமும் வருவது ஏன்? காமம் எங்கிருந்து செயல்படுகிறது?

கபாலம் முழுக்கக் காமம்தான் என்னும் ஷாலினி, காமத்தில் பன்னிரண்டு வகையென்று வகைப்படுத்திக் காட்டியிருக்கிறார்.
ஆசைகளையும் ஆஸ்திகளையும் பாதுகாப்பிற்காகவும் வாரிசுக்காகவும் என்று பன்னிரண்டு காரணங்களுக்காக நிகழும் காமத்தையும் அதற்காக ஏற்படும் காதலையும் பற்றி விளக்கி, இதில் இவ்வளவு இருக்கிறதா என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார் ஆசிரியர்.

இனப் பெருக்கம் செய்வதுதான் மரபணுக்களை ஆண்டாண்டுக்கும் பரப்புவதற்கு வழி. ஊர்ந்து செல்லும் பிராணியிலிருந்து மனிதன் வரைக்கும் உடலுறவு நிகழ்வதுதான் என்றாலும் மனிதனைத் தவிரப் பிற எந்த உயிரினமும் இன்பத்திற்காகப் புணர்வதில்லை என்ற தகவலும், எல்லாக் காலத்திலும் மனிதர்களிடம் மட்டுமே பருவகாலத்தைப் பற்றிய எந்தக் கணக்கும் இல்லாமல் உடலுறவு கொள்ளப்படுகிறது என்பதும் நம்மிடையே இருக்கும் விசித்திர மனிதர்களுக்கும் அவர்களது காம ஈடுபாட்டிற்கும் காரணம் சொல்வதாய் இருக்கின்றன.

தனது மரபணுக்களை எப்படியாவது பரவச் செய்ய வேண்டும் என்ற கருத்துடைய ஆதி மனிதர்களுக்கு, ஒருவனுக்கு ஒருத்தி என்றோ இவ்வளவு குழந்தைகள்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றோ எந்தக் கருத்தும் இருக்கவில்லை. ஆனால் இன்றைய சூழல் வேறுபட்டது. அதற்குத் தகுந்தவாறே இனப் பெருக்கத்திற்காகத் தேர்வு செய்யும் துணையைப் பற்றிய அறிவும் குழந்தை பற்றிய சிந்தனையும் இருக்கிறது என்பதை விளக்கும் இந்தக் கட்டுரைகள் ஆதிகாலத்திலிருந்து இன்று வரையிலுள்ள பரிணாம வளர்ச்சியின் தன்மையைச் சொல்கின்றன.

அறிவியல் காரணங்களோடு காமத்தையும் காதலையும் விளக்க சில குட்டிக் கதைகளையும் சொல்லும் ஆசிரியரின் உத்தியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

மற்ற உயிரினங்களுக்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கும் மிகப் பெரிய வேறுபாடு, மரபணுக்களின் செயல்பாடு. மூளையின் கட்டளையில் பதிந்திருக்கும் செயல்கள் மட்டுமே பிற உயிரினங்களால் செய்யப்படும். ஆனால் மனித மூளையும் அதன் செயல்பாடும் பகுத்தறிவும் உயிரினங்களில் அதை வேறுபட்டதாகக் காட்டுகிறது. இதன் தொடர்ச்சியே காம உணர்வும் அதனால் நுகரப்படும் இன்பமும்.

ஓர் ஆண் பல பெண்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள ஏன் விரும்புகிறான்? ஒரு பெண்ணைக் காதலித்துக்கொண்டிருக்கும்போதே மற்றொரு பெண்ணை 'சைட் அடிப்பது' ஏன்? அதற்கும் அறிவியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் காரணங்கள் இருக்கின்றன என்கிறார் ஷாலினி.

குழந்தையாகப் பிறந்து வளரும்போது எதிர் பாலினத்தை அடையாளம் காண்பதும் எதிர் பாலினத்தோடு உறவுகொள்ளலாம் என்று புரிந்துகொள்வதும் எப்படி நிகழ்கின்றன? தாய்க்கு மகன் மீதும் மகனுக்குத் தாய் மீதும் அளவு கடந்த பிரியம் இருப்பது எதனால்? இடிபஸ் காம்ப்ளெக்ஸ் (Oedipus Complex) எதனால் உருவாகிறது? இப்படிப் பல்வேறு கேள்விகளுக்கும் நம்முள் இது வரை இருந்துவரும் சந்தேகங்களுக்கும் விடை தருகிறது இந்தப் புத்தகம்.

புத்தகத்தின் தலைப்பைப் பார்த்து ஏற்படும் சலனம் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது காணாமல்போய், காமம், உறவு, வாரிசு என்று பல்வேறு நிலைகளில் இருந்த கேள்விகளுக்கான தெளிவைத் தருகிறது.

உள்ளே இடம்பெற்றிருக்கும் படங்களில் சில, பொருந்தாத மிகைப்படுத்தல்களோடு இருக்கின்றன. ஷாலினியின் மொழிநடை இந்தக் கட்டுரைகளுக்கு பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது. காரணம், வாசிப்பை எளிதாக்கும் ஆங்கிலம் கலந்த தமிழ் சிலருக்கு உறுத்தலாம்.

அர்த்தமுள்ள அந்தரங்கம், நவீன யுகத்தில் அறிவியல் சார்ந்தும் உளவியல் சார்ந்தும் புனிதமெனவும் ரகசியமெனவும் சொல்லப்படும் தகவல்களைக் காரணங்களோடு விவரிக்கும் புத்தகம்.



அர்த்தமுள்ள அந்தரங்கம்

- டாக்டர் ஷாலினி
விலை: ரூ. 70
விகடன் பிரசுரம்.


 

 

Could not connect to MySQL