அறிந்த பெண்ணினம்; அறியாத பெண்ணியம்


ரமணி வெறும் ஹவுஸ் ஒய்ப் தானா?

- செல்லப்பா

சாதனைச் சிகரங்களை நோக்கிப் பெண்கள் நடைபோடும் காலம் இது. பெண்கள் தங்களிடம் இருக்கும் திறன்களை எல்லாம் வெளிக்கொணரத் தேவையான அத்தனை வாய்ப்புகளும் எல்லாத் திசைகளிலும் முகங்காட்டி நிற்கின்றன. பெண்களின் பன்முகத் திறமைகள் முன்னெப்போதையும்விட இப்போது அதிகமாக வெளிப்படத் தொடங்கியுள்ளன.

ஆணுக்குச் சரிக்குச் சமமாக அனைத்துத் துறைகளிலும் பெண் தனது தடத்தைப் பதித்து வருகிறாள். சாதனை புரிந்த பெண்கள் யார் எனக் கேட்டால் சட்டென இந்திரா காந்தி, கிரண் பேடி, கல்பனா சாவ்லா... என நமக்குத் தெரிந்த பெண்களை எளிதாகச் சொல்லிவிடுகிறோம்.
நமக்கு அருகாமையிலேயிருந்து தமது திறமைகளை வெளிப்படுத்தும் பெண்களை  நம்மால் எளிதாகப் புறக்கணித்துவிட முடிகிறது.

நம்முள் வேரூன்றியுள்ள அறியாமையின் காரணமாகவே இது நிகழ்வதை உணர முடிகிறது. சாதனை என்பதே சமூகம் சார்ந்த ஒன்றென்ற நமது புரியாமை விளைவித்த குழப்பம் இது. நம் கண் முன்னே தாயாக, சகோதரியாக, தோழியாக, உறவாக தமது ஆற்றலைப் பிரகாசமாக வெளிப்படுத்துபவர்களை எப்படி மறந்துவிடுகிறோம் என நினைக்கையில் ஆச்சரியமும் வேதனையும் தான் மிஞ்சுகிறது. இப்படிப்பட்ட பெண்கள் பலரை ஒவ்வொருவரும் நம் வாழ்வில் தினசரி எதிர்கொள்கின்றோம்.

 

குடும்பத்தை விட்டு வெளியே இறங்கி, தங்களைச் சமூகத்துடன் இணைத்துக் கொண்டு போராடும் சமூகப் போராளிகளைப் போலவே தங்கள் சுக துக்கங்களைக் கடந்து தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்க்கையைத் தெளிவாக வாழ்ந்த பெண்களைக் குறித்து எழுதுவதும் அவசியமான ஒன்றெனத் தோன்றுகிறது.

 

வாழ்க்கையைத் தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் எதிர்கொள்ளும் பெண்கள் சமூக வெளியில் உலவுவதைப் போன்றே குடும்பத்துக்குள்ளும் உலவுகிறார்கள். சமூக வெளியில் போராடும் பெண்கள்மீது அதிகமாகக் குவிக்கப்படும் வெளிச்சம் குடும்பத்துக்குள்/ குடும்பத்துக்காகப் போராடும் பெண்களை ஏனோ இருட்டிலேயே வைத்திருக்கின்றது.

 

சமூகத்தில் ஆண்களால் ஏற்படும் அத்தனை சவால்களும் குடும்பத்துக்குள் இருக்கும்  பெண்களுக்கும் இருக்கின்றன. அத்தகு சவால்களை எதிர்கொண்டு, சமாளித்து தங்கள் வாழ்வை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் பெண்களில் யாரையாவது நினைவுகூர்ந்தால் அது ஏதோ ஒரு வகையில் அவர்களின் தன்முனைப்புக்குத் தெரிவிக்கும் மிகச் சிறிய அபிமானமாக இருக்கும்.

 

வெளி உலகம் என்றால் என்னவென்றே அறிந்துகொள்ள வாய்ப்பில்லாத சூழ்நிலையில் வாழ்ந்த ரமணிக்கு அவரது பதினைந்து அல்லது பதினாறு வயதில் திருமணம் நடந்தது. அந்த வயதில் தன்னைவிட மன முதிர்ச்சி கொண்ட அன்பான கணவனோடு குடித்தனத்தைத் தொடங்கினார். பொறுப்பான மனைவியாகத் தனது எல்லாக் கடமைகளையும் நிறைவேற்றினார்.

 

முப்பது வயதுகளின் மத்திப் பகுதியில் அவருக்குள் தனது வாழ்வு குறித்த ஒரு போதாமை ஏற்பட்டது. ஒரு குடும்பத் தலைவியாகத் தனது கடமைகளை முடிப்பதோடு தனது பணி நிறைவு பெற்றுவிடும் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதைத் தாண்டி தானும் ஏதாவது செய்தாக வேண்டும் என்னும் ஆர்வம் அவரைத் தொற்றிக் கொண்டது.

 

 தன் கணவரோடு ஆலோசனை செய்தார். அவரது ஆர்வத்திற்குத் தடைசொல்லாமல்  தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதாக வாக்களித்தார் கணவர். முடிவெடுக்கும் அத்தனை உரிமையையும் ரமணிக்கே தந்தார். பத்தாவதுவரை மட்டுமே படித்திருந்த தன்னால் என்ன செய்ய முடியும் என அவர் எண்ணவில்லை. தனது படிப்பை வைத்து என்ன செய்யலாம் என யோசித்தார். சிறு வகையிலான துணி வியாபாரம் தொடங்கினார்.

 
ஆரம்பத்தில் சிறு சிறு சிக்கல் ஏற்பட்டன. நெருங்கிய நட்பும் உறவும் பரிகசித்தன. நெருக்கடிகளைவிட நெருங்கியவர்கள் தந்த சிக்கலே அதிகமாக இருந்தது. அத்தனையையும் சமாளித்தார். இன்று தனது ஊரில் அனைவரும் அறிந்துகொண்ட ஜவுளி நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவருகிறார். அவரது சொந்த முயற்சி, கடின உழைப்பால் பத்தாண்டுகளுக்குள் யாராலும் நினைத்துப் பார்க்க இயலாத உயரத்தை அடைந்திருக்கிறார்.

 
காகிதத்தில் ஓரிரண்டு பக்கங்களுக்குள் அடங்கிவிட்ட சாதனையை அவர் அடைவதற்குப் பட்டபாடு, எதிர்கொண்ட இன்னல்கள் எல்லாவற்றையும் வார்த்தைகளுக்குள் அடக்க முயல்வதே அபத்தம்தான். எவ்வளவுதான் வெளியிலிருந்து ஆறுதல்கள், ஆதரவுகள் கிடைத்தபோதிலும் அகத்தில் எழும் நெருக்கடிகள், உளைச்சல்கள், வலிகளைச் சமாளிக்கத் தேவையான மன ஆற்றலைப் பெற்றாலொழிய தனது பயணத்தின் வேர்களைப் பல திசைகளிலும் செலுத்துவது கடினமே.

 

தன்னால் இயன்றதெல்லாம் செய்யத் துடிக்கும் ஆர்வம், தனது திறமைமேல் தான் வைத்த நம்பிக்கை எதிர்ப்படும் எல்லா வகையான தடைகளையும் லாவகமாகக் கையாளும் திறன் இவற்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு செயல்பட்ட ரமணியின் மனஆற்றல் மட்டுமே இந்த வெற்றிக்குப் பக்கபலம்.

குடும்பத்துக்குள் இருந்தபடியே இத்தகு ஆற்றலை எப்படிப் பெற்றார்? பெண்ணியவாதிகள் எனக் கூறிக் கொள்ளும் பெண்களைப் பற்றியே அறிந்திராத இவரைச் சாதனையை நோக்கி நகர்த்தியது எது? பெண் சுத்திரம், பெண்ணியம் குறித்துப் பேசுவது, எழுவதுவது, சிந்திக்க வைப்பது போன்றவற்றைச் செய்பவர்கள் மட்டுமே பெண்ணியவாதிகள் எனில் ரமணி யார்? அவரை எந்தக் கூட்டத்தில் சேர்ப்பது? ரமணி வெறும் ஹவுஸ் ஒய்ப் தானா?

 

 

கருத்துகள்
உங்கள் கருத்து? 5 கருத்துகள்
How true. Still it is a big struggl... geetha 2008-04-09
How true. Still it is a big struggl... geetha 2008-04-09
ramaniyai eanakku kaattiythuku nand... Bhuvana 2008-03-26
dear writer, i do not know who u... thamizh dhassan 2008-01-12
பெĩ... Girijamanaalan 2007-12-28
எங்களைப் பற்றி | தொடர்பு கொள்ள | விதிமுறைகளும் நிபந்தனைகளும் | பொறுப்பாகாமை அறிவிப்பு

உள்ளடக்கத்தை வழங்குவோர் மீடியா மெசேஜ் இன்க். வலையக வடிவமைப்பும் பராமரிப்பும் மின்வெளி இன்ஃபோடெக்